ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவருமான ஐ. தாஹிராவின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. காட்டன் சூதாட்டம், குட்கா, சட்டவிரோத மது விற்பனை, கல்குவாரிகள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபடுவோரிடம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூலிக்கப்படுவதாகவும், பணம் தராவிட்டால் தொழில் நடத்த முடியாதவாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், SIPCOT தொழிற்பேட்டை, தோல் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களிடம் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் மூலம் பணம் கோரப்படுவதாகவும், தாம் பரிந்துரைக்கும் நபர்களுக்கே அரசு ஒப்பந்தங்களை ஒதுக்க அதிகாரிகள் வற்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர் நகைக்கடை உரிமையாளர்களிடம் 20 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.33,000 எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது பினாமிகள் மூலம் சொத்துகள் சேர்க்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி மற்றும் திமுக தரப்பினருடன் தொழிலதிபர்கள் வாயிலாக மறைமுகத் தொடர்பில் இருப்பதாக எழும் சந்தேகங்கள் குறித்தும், அரசியல் குதிரை பேரம் தொடர்பாக ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நம்பிக்கையைக் காப்பாற்றவும், உண்மையை வெளிக்கொண்டுவரவும் தமிழக அரசு மற்றும் கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர், துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு அவசரப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மா. சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.