ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருவண்ணாமலை வேளாண் அறிவியல் மையம் மற்றும் புதுடெல்லி ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் ஆகியவை இணைந்து, 'அஸ்வகந்தா' மூலிகைப் பயிர் சாகுபடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்
இந்நிகழ்விற்கு திருவண்ணாமலை வேளாண் அறிவியல் மையத்தின் பெருந்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மூத்த அறிவியல் அறிஞர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.முக்கியப் பொறுப்பாளர்களான சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில மூலிகை வாரியம் விவசாய ஆலோசகர் கருப்பையன், ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சந்தியா, வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் திலகவதி, ராமன், சூரிய நாராயணன் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிகண்டன் மற்றும் ஆரணி மருத்துவ மூலிகை கழகம் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்வில், தொழில்நுட்ப வல்லுநர்கள் விஜயகுமார் கலந்துகொண்டு அஸ்வகந்தா சாகுபடிக்கு ஏற்ற நிலம், தட்பவெப்ப நிலை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். மற்றொரு வல்லுநரான நாராயணன், பயிரைப் பாதுகாக்கும் முறைகள் மற்றும் பூச்சி, நோய் தடுப்பு மேலாண்மை குறித்து உரையாற்றினார்.
இவ்விழிப்புணர்வு முகாமில் 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்வின் நிறைவாக ஆய்வகப் பணியாளர் சௌத்திரி நன்றி கூறினார்.