**கமல்ஹாசன், இயக்குநர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல் – வேலூர் எஸ்.பி.யிடம் மனு!**
**வேலூர்:**
சண்டியர் என்ற திரைப்படப் பெயர் மீண்டும் சமூகப் பதற்றத்தையும், சாதி மோதல்களையும் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, அத்திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் புகார் மனு அளித்தனர்.
புதிய தமிழகம் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் பி. ஜெயசீலன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் கந்தன், கிருஷ்ணராவ் உள்ளிட்டோர் இந்தப் புகார் மனுவை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி. ஜெயசீலன் கூறியதாவது:
“நான் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறேன். பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன், ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதன் தொடக்க விழா நடைபெற்றதாகவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு இதே ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்க முயற்சி செய்தபோது, அந்தப் பெயர் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இருப்பதாகவும், தென் தமிழகத்தில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்களைத் தவிர்க்குமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு அறிவுரை வழங்கியதைத் தொடர்ந்து, அத்திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டது.
அன்று எந்தக் காரணத்திற்காக அந்தப் பெயர் மாற்றப்பட்டதோ, அதே பெயரில் மீண்டும் திரைப்படம் எடுக்க முயற்சிப்பது சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தி, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கக்கூடும்.
பொதுவெளியில் வன்முறையைத் தூண்டும் வகையிலான செயல்பாடுகளுக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ‘சண்டியர்’ என்ற பெயருடன் கத்தி மற்றும் ரத்தம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விளம்பர முன்னோட்டமும் கவலையளிக்கிறது.
பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்ற கருத்தை முன்னிறுத்துவது சமூகத்தில் வன்முறை எண்ணங்களைத் தூண்டக்கூடும். எனவே, திரைப்படத்தின் பெயரை மாற்றுவதுடன், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், திரைப்படத்தின் பெயர் மற்றும் விளம்பர முன்னோட்டம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.