விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் குமாரபாளையத்தில் கொண்டாட்டம்!
குமாரபாளையம்:
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தேசியவாதியுமான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறதுஇதையொட்டி, விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் குமாரபாளையம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தேசிய கல்வி தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விடியல் ஆரம்பம் அறக்கட்டளையின் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். ஜாய்ஸ் அருள்செல்வி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியில் கல்வியின் பங்கு, அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். கல்வி என்பது தனிமனித முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது என்றும் வலியுறுத்தப்பட்டது.
தேசிய கல்வி தினத்தின் வரலாறு!
மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1888-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இவர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக 1947 ஆகஸ்ட் 15 முதல் 1958 பிப்ரவரி 2 வரை பணியாற்றினார். இந்தியாவில் கல்வித்துறையின் வளர்ச்சிக்கும், உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
சிறந்த எழுத்தாளரான இவர், தனது சுயசரிதையான India Wins Freedom என்ற நூலின் மூலம் இந்திய விடுதலைப் போராட்ட அனுபவங்களையும் வரலாற்றுச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். இவரது கல்விச் சேவையையும் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில், 2008-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ஆம் தேதி இந்தியாவில் தேசிய கல்வி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஹெலன் பிரிஸ்சில்லா, ஸ்டெல்லா, ராணி மற்றும் ஜமுனா, தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.