மூன்று புகார்கள்... ஒரே பதில்! முதலமைச்சரின் முகவரியையே மதிக்காத அதிகாரிகளா?


மாவட்ட ஆட்சியர் பிரியா கவனிப்பாரா? DTCP அதிகாரிகளின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

ராணிப்பேட்டை மாவட்டம்:

பொதுமக்களின் குறைகளை நேரடியாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சரின் முகவரியில் அளிக்கப்படும் புகார்களுக்கே உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையா? புகார்களின் தன்மையைக்கூட முறையாகப் பரிசீலிக்காமல் ஒரே பதிலை அனுப்பி புகார்களை முடித்துவிடுவதுதான் அதிகாரிகளின் விசாரணை முறையா? என்ற கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மா. சதிஷ்குமார்.

இவர் களத்தூர் கிராமம் சர்வே எண் 535/2 தொடர்பான நிலப் பிரச்சினை மற்றும் சாலை அமைக்கப்பட்ட விவகாரம் குறித்து புகார் எண் 19118467-ன் கீழ் முதலமைச்சரின் முகவரியில் மனு அளித்துள்ளார்.

அதேபோல், வாலாஜாபேட்டை நகராட்சி சர்வே எண் 265/1A1-ல் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனை விற்பனை தொடர்பாக புகார் எண் 19401781-ன் கீழும், வாலாஜாபேட்டை நகராட்சி கதவு எண் 48/F, T.S. எண் 1293 தொடர்பான கட்டிட அனுமதி மற்றும் பள்ளிப் பயன்பாடு குறித்து புகார் எண் 19326671-ன் கீழும் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளார்.

ஆனால், மூன்று புகார்களும் வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் வெவ்வேறு நிர்வாகத் துறைகள் தொடர்பானவையாக இருந்தும், களத்தூர் சர்வே எண் 535/2 தொடர்பாக வழங்கப்பட்ட அதே பதில் கடிதம் மற்ற இரண்டு வாலாஜாபேட்டை நகராட்சி புகார்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

களத்தூர் புகாருக்கான பதிலையே வாலாஜாபேட்டை நகராட்சி புகார்களுக்கும் அனுப்பியது எப்படி? அதிகாரிகளின் இந்தச் செயல்பாட்டை முதலமைச்சரின் முகவரி நிர்வாகம் கவனிக்கவில்லையா?

களத்தூர் கிராமத்தில் சாலை அமைக்கப்பட்டதற்கான கோரிக்கை மனுக்கள், ஊராட்சித் தீர்மானங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் பணி ஆவணங்கள் குறித்த கேள்விகளுக்கு முழுமையான விளக்கம் கிடைத்ததா என்பதே இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

மறுபுறம், வாலாஜாபேட்டை நகராட்சி சர்வே எண் 265/1A1-ல் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனை விற்பனை தொடர்பான புகாரில், நகர ஊரமைப்புத் துறை (DTCP) அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு என்ன? சம்பந்தப்பட்ட மனைப்பிரிவுக்கு திட்ட அனுமதி உள்ளதா? விதிமீறல்கள் கண்டறியப்பட்டனவா? உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதற்கான தெளிவான பதில் ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

அதேபோல், கதவு எண் 48/F, T.S. எண் 1293 தொடர்பான கட்டிட அனுமதி மற்றும் பள்ளிப் பயன்பாடு குறித்த புகாரில் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் திட்டமிடல் துறை அதிகாரிகள் என்ன ஆய்வு மேற்கொண்டார்கள் என்பதற்கும் தனிப்பட்ட பதில் அளிக்கப்படவில்லை என சமூக ஆர்வலர் சுட்டிக்காட்டுகிறார்.

முதலமைச்சரின் உத்தரவுகளுக்கும் புகார் மனுக்களுக்கும் அதிகாரிகள் மதிப்பளிக்கிறார்களா?

முதலமைச்சரின் முகவரியில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், வெவ்வேறு புகார்களுக்கு ஒரே பதிலை அனுப்பும் நிலை ஏற்பட்டிருப்பது, புகார் விசாரணையின் தரம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்புணர்வு குறித்து கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முதலமைச்சரின் முகவரியை பொதுமக்கள் நம்பிக்கையுடன் அணுகும் நிலையில், அந்த நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட அனுமதிக்கலாமா? புகார் மனுக்களைப் பரிசீலிக்கும் அலுவலர்கள் அவற்றின் உண்மையான விவரங்களைச் சரிபார்க்க வேண்டாமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

மாவட்ட ஆட்சியர் பிரியா கவனிப்பாரா?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக நடவடிக்கை எடுக்கின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர் பிரியா கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. குறிப்பாக, வாலாஜாபேட்டை நகராட்சி மற்றும் நகர ஊரமைப்புத் துறை தொடர்பான புகார்களுக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டதா, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, மூன்று புகார்களையும் தனித்தனியாக ஆய்வு செய்ய உத்தரவிடுவாரா? அல்லது தொடர்புடைய அதிகாரிகளின் விளக்கத்துடன் மட்டுமே இந்தப் பிரச்சினை முடித்துவைக்கப்படுமா? என்பதே தற்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பு.

DTCP அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு தொடர்பான புகாரில் நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகள் தங்களுடைய சட்டப்பூர்வப் பொறுப்பை முறையாக நிறைவேற்றியுள்ளார்களா என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். புகார் அளிக்கப்பட்ட பின்னரும் சம்பந்தப்பட்ட இடத்தில் விற்பனை மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்ந்திருந்தால், அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் வலியுறுத்துகிறார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா?

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் பெற முயன்றும் உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறும் சமூக ஆர்வலர், தற்போது மூன்று புகார்களையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும், சம்பந்தப்பட்ட இடங்களில் கள ஆய்வு நடத்த வேண்டும், ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும், ஒரே பதில் வழங்கப்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என முதலமைச்சரிடம் தொடர் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், புகார்களை முறையாக விசாரிக்காமல் பதில் வழங்கிய அலுவலர்கள் அல்லது கடமையில் அலட்சியம் காட்டியவர்கள் யார் என்பது உயர் அதிகாரி தலைமையிலான விசாரணையில் கண்டறியப்பட்டு, தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசுப் பணிவிதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் புகார்களை மீண்டும் அதே அலுவலகத்திற்கு அனுப்பி வழக்கமான பதிலுடன் முடித்துவிடாமல், மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் மேல்நிலையில் உள்ள உயர் அதிகாரி மூலம் சுயாதீன விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்பதும் அவரது முக்கியக் கோரிக்கையாகும்.

மூன்று புகார்கள்... ஒரே பதில்! இதுதான் மக்கள் குறைகளைத் தீர்க்கும் நிர்வாகத்தின் செயல்பாடா? முதலமைச்சரின் முகவரியின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பேற்பது? மாவட்ட ஆட்சியர் பிரியா நடவடிக்கை எடுப்பாரா? DTCP அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுமா? தமிழக முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா?

பொதுமக்களின் புகார்களுக்கு வெறும் பதில் கடிதங்கள் மட்டும் போதாது; உண்மையான விசாரணையும், ஆவணங்களுடன் கூடிய விளக்கமும், தவறு இருந்தால் நடவடிக்கையும்தான் தேவை என்பதே  சிறப்பு செய்தியாளர் M.சதீஷ்குமார்

Previous Post Next Post