மேல்விஷாரம் குப்பை கிடங்கில் சிறார்கள் வேலை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை



ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள சாதிக் பாஷா நகர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. இங்குள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் ஏற்று நடத்தி வருகிறார். இதற்காக அப்பகுதியில் குப்பைகழிவு தரம் பிரிக்கும் மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மையத்தில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை, அவர்களின் பெற்றோர்களின் அனுமதியோடு ஒப்பந்ததாரர் பணியில் ஈடுபடுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களை ஆபத்தான சூழலில் பணியமர்த்துவது சட்டவிரோதம் என்பதால், இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post