ஆற்காடு - வேலூர் தேசியநெடுஞ்சாலை: மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்பு அராஜகம்! பார்க்கிங் ஸ்டாண்டாக மாறியதால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!


ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்ரா காபி மற்றும் ட்ரிபிள் எஸ் (sss) கல்லூரிக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், அண்மையில்தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இம்மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, பெரும் வாகன நெரிசலில் திணறி வருகிறது!

மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் காலை முதல் மாலை வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. பொதுமக்களின் தங்குதடையற்ற பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட மேம்பாலம், தற்போது இலவச ‘பார்க்கிங் ஸ்டாண்ட்’ போல மாற்றப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமன்றி, மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருபுறமும் சிற்றுண்டி மற்றும் பானி பூரி கடைகள் முளைத்து, வியாபாரம் தடபுடலாக நடைபெற்று வருகிறது. சாலையில் பயணிப்போர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே கண்டபடி நிறுத்திவிட்டு, கடைமுன் நின்று நொறுக்குத்தீனி சாப்பிடுவதால் சாலை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

இக்கடைகளாலும், அங்கே நிறுத்தப்படும் வாகனங்களாலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பாலத்தின் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் நோயாளிகளைச் சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் கடந்து செல்ல முடியாமல் மணி கணக்கில் சிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய விபத்து நிகழக்கூடும் என்ற பயத்துடனேயே மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இந்தப் பாதையைக் கடந்து செல்கின்றனர்.

"மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி என்பது வாகனங்களை நிறுத்தும் இடமா? அல்லது சிற்றுண்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் இடமா?" என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி கொந்தளித்து வருகின்றனர்.

பொதுமக்களின் உயிருடனும், நேரத்துடனும் விளையாடும் இந்த ஆக்கிரமிப்புகளைத் துறை சார்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

சாலையைச் சிறைபிடித்துள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யாவிட்டால், பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்!
Previous Post Next Post