தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் மைக் செட் உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி நடத்தப்பட்டது - ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்புஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் வண்ணமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்புகள் நடைபெறுகிறது.


இதேபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது தனி திறன்களை வெளிக்காட்டும் வண்ணமாக இசை போட்டிகள் நடத்தி வருகின்றனர். ஆடி மாதங்களில் திருவிழாக்கள் விசேஷங்கள் குறைவாக உள்ள போது  தங்களுடைய இசைக்கருவிகளை மேம்படுத்தும் வண்ணமாகவும் தங்களது இசைக்கருவிகளின் திறன்களை சோதனை செய்யும் விதமாகவும் இதுபோன்ற இசை திருவிழாக்கள் நடத்துகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம்  கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியில் ஒலிபெருக்கி நண்பர்கள் சார்பாக 2 ஆம் ஆண்டு இசைப்போட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. 

இதற்காக  கம்பம் அருகே உள்ள  குள்ளப்ப கவுண்டன்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் மலையடிவாரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வண்ணம் திறந்தவெளியில் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து சுமார் 128  மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஒலிபெருக்கியின் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்றும் இன்றும் இந்த இசைப் போட்டி திருவிழாவானது நடைபெறுகிறது.

இப்போட்டியில் மைக் செட் போட்டியில் ஒலிபெருக்கிகள் வரிசையாக கட்டப்பட்டு அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் ஒலிக்கின்றதோ அதனை சிறந்த ஒலி பெருக்கியாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஒலிபெருக்கி இசை போட்டியில் முற்றிலுமாக பழைய பாடல்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த இசை போட்டியில் வெற்றி பெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்க தொகை கோப்பைகள் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த போட்டியினை கம்பம் மற்றும் தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இசை ரசிகர்கள் வந்து ஆரவாரம் செய்து போட்டியினை ரசித்துச் செல்கின்றனர்.

இந்தப் போட்டி குறித்து மைக் செட் உரிமையாளர்கள் கூறுகையில் 2 ஆண்டு காலமாக இந்த மைக் செட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. எங்களது கருவிகளின் திறன்கள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாகவும், இத்துறையில் தங்களை நவீன காலத்திற்கு ஏற்றவாறு வளர்த்துக் கொள்ளும் விதமாகவும்,இந்த போட்டி நடைபெறுகிறது. மேலும் இதன்மூலம் தங்களது தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளும் விதமாக இந்த போட்டி அமைகிறது என தெரிவித்தனர் மேலும் மைக் செட் உரிமையாளர்களுக்கு என  நல வாரியம் வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக போராடி வருவதாகவும் தற்போது அமைந்துள்ள புதிய  அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். மேலும் இந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஊருக்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் காத்திடும் வகையில் அரசு வழிவகை செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Previous Post Next Post