பேராவூரணியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்.




தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உணவகம், மெக்கானிக் ஷாப் மற்றும் பெட்டிக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான 'மணி மெஸ்' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில்,  எதிர்பாராத விதமாக மின் கசிவினால் தீப்பற்றியது . கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவி, அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் அருகில் இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவத் துவங்கியது. இதில் நாகப்பன் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் மற்றும் மெக்கானிக் ஷாப், மேலும் சின்னையன் மற்றும் முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு பெட்டிக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகள் முற்றிலுமாகத் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது. தீ விபத்து ஏற்பட்டவுடன், உணவகத்தில் பணியில் இருந்த சமையலர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி மற்றும் அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். 

பேராவூரணி பேருந்து நிலையம் அருகே அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு கடைகளில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம் ஆனதால்  அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post