சிப்காட் வேண்டாம்; விவசாயம் வேண்டும்!” – காட்பாடி விவசாயிகளுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. சுதாகர் ஆட்சியரிடம் மனு!

வேலூர் மாவட்டம்..
24/11/2026

“
4 கிராம விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு – அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மகிமண்டலம், இளையநல்லூர், தேன்பள்ளி, வெப்பாலை ஆகிய நான்கு கிராமங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் அணுகுசாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். சுதாகர் விவசாயிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸிடம் கோரிக்கை மனு அளித்தார்.

சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாய நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி எழுத்துப்பூர்வமான மனு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே இப்பகுதி விவசாயிகள் பவர் கிரிட் மின் திட்டம் மற்றும் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலைத் திட்டத்திற்காக தங்களது நிலங்களை இழந்துள்ளனர். மேலும், சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்திற்காகவும் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2025 அக்டோபரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால் நான்கு கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை வேண்டாம் என்றும், தங்களது பாரம்பரிய விவசாய நிலங்களே வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாரம்பரிய விவசாயத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. சுதாகர் வலியுறுத்தினார்.

“சிப்காட் வேண்டாம்; விவசாயம் வேண்டும்” என்ற முழக்கத்துடன் விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்து, நான்கு கிராம மக்களின் விவசாய நிலங்களைப் பாதுகாக்குமா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

A. சரவணன்,
வேலூர் மாவட்ட செய்தியாளர்.
Previous Post Next Post