குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், வேமன் காட்டுவலசு மற்றும் அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், சென்னை சுரபி பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் அவர்களால் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்விக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை ஏற்படும் கல்விச் செலவுகளுக்கும் உதவி வழங்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்குவித்து, மாணவிகள் உயர்கல்வி பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகளுக்கும் சுரபி பவுண்டேஷன் சார்பில் புத்தாடைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை பள்ளித் தலைமையாசிரியர் மாதேஷ் மற்றும் விடியல் பிரகாஷ் ஆகியோர் மாணவிகளுக்கு வழங்கினர்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எண்ணங்களின் சங்கமம் NDSO நிறுவனர் J. பிரபாகரன் அவர்களுக்கு மாணவிகள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குமார், அருள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் வாசுதேவன் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.