திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில்,  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம்  சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பொற்செல்வன், எம்.பி.பி.எஸ், டி.பி.எஹ் அவர்களின் உத்தரவின்படி,
சோலங்குருணி, துவரிமான், வேடர்புளியங்குளம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள், திறந்தநிலை நீர்த்தேக்கங்கள், பயன்படுத்தப்படாத பொருட்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையற்ற டயர்கள் மற்றும் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, குடிநீர்த் தொட்டிகளை மூடி வைத்தல், வாரம் ஒருமுறை தண்ணீர் சேமிப்புப் பாத்திரங்களைச் சுத்தம் செய்தல், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரித்தல் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
“கொசு உற்பத்தியைத் தடுப்போம்; டெங்கு காய்ச்சலை ஒழிப்போம்” என்ற நோக்கத்துடன், பொதுமக்களின் ஒத்துழைப்போடு தடுப்புப் பணிகள் தீவிரமாக  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post