முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் உதவியாளர் பிரகாசம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
திருப்பத்தூர்:
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் உதவியாளராகப் பணியாற்றிய வாணியம்பாடியைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும், ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பணியிட மாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி, 68 பேரிடம் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.6 கோடியே 30 லட்சம் பெற்றதாகப் புகார் எழுந்துள்ளது.
பணம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலையோ, பணியிட மாறுதலோ கிடைக்காத நிலையில், தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால், உரிய பதில் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பிரகாசம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு வேலை மற்றும் பணியிட மாறுதலுக்காகப் பணம் கொடுத்து ஏமாறும் பொதுமக்களுக்கு இந்தச் சம்பவம் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
A. சரவணன்.
வேலூர் மாவட்ட செய்தியாளர்