கொடைக்கானல், அக்.31-
பூண்டில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கு
கொடைக்கானல் வட்டம், மன்னவனூர் கிராமத்தில் அக்12ல்
நடைபெற்றது.இக்கருத்தரங்கினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர்
பாதுகாப்புத்துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் மற்றும்
தோட்டக்கலை மற்றும் வனவியல் ஆராய்ச்சி நிலையம் கொடைக்கானல் வேளாண் மற்றும்
தோட்டக்கலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் இணைந்து நடத்தினர்.இக்கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைத்து
விவசாயிகளையும்
முனைவர். கி.கல்பனா, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் பாதுகாப்புத் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் வரவேற்று இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கத்தினை விசாயிகளுக்கு எடுத்துரைத்து கருத்தரங்கினை
தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள பயிர் பாதுகாப்பு
மையத்தின் இயக்குநர் முனைவர். மூ. சாந்தி இக்கருத்தரங்கிற்கு தலைமையேற்று பூண்டு
உற்பத்தியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பிரசுரங்களை வெளியிட்டு
தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில் கோடை உழவு மேற்கொள்ளுதல், விதை மற்றும்
மண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் மற்றும் இரசாயன
பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல், சாறு உறிஞ்சும் பூச்சிகளை
கட்டுப்படுத்த மஞ்சள் மற்றும் நீல வண்ண ஒட்டுப் பொறிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அங்கக முறையில் பூண்டு சாகுபடி செய்வதை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அங்கக முறையில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு
சந்தையில் கூடுதல் விலை கிடைப்பதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க முடியும்
என்றும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து திரு. த. வெற்றிவேல் தோட்டக்கலை அலுவலர், மன்னவனூர்
அவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பயிர் பாதுகாப்பின்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் . பிறகு தோட்டக்கலைத் துறையால் செயல்படுத்தப்படும்
பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து முனைவர். கி. கல்பனா, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர்
பாதுகாப்புத் துறை அவர்கள் பூண்டுப் பயிரின் முக்கியத்துவத்தையும், உயிர் உரங்கள் மற்றும் உயிர்
எதிர்க்காரணிகளைக் கொண்டு பூண்டில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான
வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.பிறகு தோட்டக்கலை மற்றும் வனவியல் ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல் பேராசிரியர்
மற்றும் தலைவர் முனைவர். கா. சுந்தரைய்யா பூண்டு பயிர் உற்பத்தியில் உயரிய தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முனைவர். செ. சுகன்யா கண்ணா, இணைப் பேராசிரியர் (வேளாண் பூச்சியியல்) பூண்டு உற்பத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றியும்
முனைவர். ஆ.விஜயசாமுண்டீஸ்வரி, இணைப் பேராசிரியர் (பயிர் நோயியல்) பூண்டு பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக
எடுத்துரைத்தார்கள்.
தொழில்நுட்ப அமர்வுகளைத் தொடர்ந்து விவசாயிகள் வயலில் உயிரியல் கட்டுப்பாட்டுக்
காரணிகளான பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் டிரைக்கோ டெர்மா அஸ்பெரில்லம் ஆகியவற்றைக்கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் மண்ணில் இடுதல் தொடர்பான செயல்விளக்கம் நடத்தப்பட்டது. இதன் மூலம் பூண்டு பயிரில் நோய்களை கட்டுப்படுத்த இக்காரணிகளைச் சரியான
முறையில் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட பூண்டு சாகுபடி விவசாயிகள் கலந்து கொண்டு
வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் உரைகள், தொழில்நுட்ப
ஆலோசனைகள் மற்றும் செயல்விளக்கம் மூலம் பூண்டு பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தகவல்களை பெற்று பயனடைந்தனர்.மேலும் இக்கருத்தரங்கில் குறிஞ்சிமலை உழவர் உற்பத்தியாளர் சங்கத்தினைச் சேர்ந்த
சக்திவேல் அவர்களும் பூண்டி உழவர் உற்பத்தியாளர் மையத்தைச் சேர்ந்த தாமோதரன்
அவர்களும் இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை
தெரிவித்தனர்.
இறுதியாக முனைவர். கா. சுந்தரைய்யா, பேராசிரியர் மற்றும் தலைவர் நன்றியுரை கூறினார். மேலும் இந்த கருத்தரங்கை பயிர் பாதுகாப்பத் துறை கண்காணிப்பாளர் ஆ. சரவணன், ச. தங்கராஜ், ச. புனிதா மற்றும் த. சேதுவிநாயகம் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.