பொதக்குடியில், பழமையான ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் மகான் ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அரவணைத்து அருளாசி வழங்கியவராகப் பக்தர்களால் போற்றப்படுகிறார். இறுதியாகப் பொதக்குடியில் தங்கிய அவர், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இத்தர்கா அப்பகுதி மக்களிடையே ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக சந்தனக்கூடு பல்வேறு வண்ண மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது . இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலித்த சந்தனக்கூடு ஊர்வலம், தாரை தப்பட்டை மற்றும் மேளதாளங்கள் முழங்க, தர்காவிலிருந்து புறப்பட்டது. பொதக்குடியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலத்தைக் காணச் சாலையோரங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். தர்காவிலிருந்து புறப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம், பொதக்குடியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, அதிகாலையில் மீண்டும் தர்காவைச் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து, மகானின் சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்தக் கந்தூரி விழாவில் ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு வழிபட்டனர். குறிப்பாக, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழாவில் பங்கேற்றது மத நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. மக்களின் ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற பொதக்குடி தர்கா கந்தூரி விழாவால், அப்பகுதி முழுவதும் விழாக்கோலமாக காணப்பட்டது. மின்னொளியில் ஜொலித்த சந்தனக்கூடு ஊர்வலத்தைக் காணப் பொதுமக்கள் திரண்டதால் , விழா களைகட்டியது .
Previous Post Next Post