டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது, தட்டிக் கேட்ட சமையல் கலைஞர் மீது சேல்ஸ்மேன் கொலைவெறித் தாக்குதல்:

கலவை:-
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமையல் கலைஞர் கோதண்டன்  டாஸ்மாக் கடையில் கூடுதல் விலையைக்  தட்டிக் கேட்டதற்காக விற்பனையாளர் மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்துத் துவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் (சமையல் கலைஞர்), கடந்த 9ஆம் தேதியன்று கலவை அருகே உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அங்கு விற்பனையாளரான பாண்டியனிடம் 150 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் கேட்டுள்ளார். கையில் பணமில்லாததால் ஜி.பே (GPay) மூலமாக 150 ரூபாயை அனுப்பி உள்ளார்.

​ஆனால், விற்பனையாளர் பாண்டியன் அந்தப் பாட்டிலின் விலை 160 ரூபாய் என்றும், இன்னும் 10 ரூபாய் அனுப்பினால் மட்டுமே பாட்டில் தரப்படும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார். "அரசு நிர்ணயித்த விலை 150 ரூபாய் தானே? ஏன் கூடுதலாக 10 ரூபாய் கேட்கிறீர்கள்?" தற்போதுள்ள அரசாங்கம் உங்களுக்கு சம்பள உயர்வு கடை வாடகை அனைத்தையும் கொடுத்துள்ளது என்று கோதண்டன் நியாயமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த முறைகேட்டை அவர் தனது செல்போனில் வீடியோ எடுக்கவும் முயன்றுள்ளார்.

கோதண்டன் வீடியோ எடுப்பதைப் பார்த்த ஆத்திரமடைந்த விற்பனையாளர் பாண்டியன், டாஸ்மாக் அறைக்கதவைத் திறந்து அவரை உள்ளே இழுத்துள்ளார். அங்கு டாஸ்மாக் கடையில் அரசு அதிகாரிகளால் நியமிக்கப்படாத உதவியாளர்களாக வேலை பார்க்கும் ராம்குமார், தயாளன் மற்றும் பாண்டியனின் அக்கா கணவர் ஆகியோர் சேர்ந்து கொண்டு கோதண்டனை கொலை வெறியோடு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைக் கண்ட அங்கிருந்த மதுபானப் பிரியர்கள் ஓடிவந்து அவரை மீட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கோதண்டனிடம் பேசிய விற்பனையாளர் பாண்டியன், "நீ அடி வாங்கியதோடு ஓடிவிடு; எங்கு போய் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய், என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு எம்.எல்.ஏ, எம்பிக்களைத் தெரியும், அதிகாரிகளும் என் கைக்குள் தான் இருக்கிறார்கள்" என்று மிரட்டியுள்ளார்.

​அதுமட்டுமின்றி, அவரது செல்போனைப் பிடுங்கி வைத்துக் கொண்டதோடு, குவாட்டர் பாட்டிலும் தராமல், செலுத்திய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் சுமார் இரண்டு மணி நேரம் அவரை அங்கேயே காக்க வைத்துள்ளனர். அதன்பிறகு செல்போனை மட்டும் அவரிடம் திருப்பித் தந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் உள்காயமடைந்த கோதண்டன், உடனடியாக கலவை அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கலவை காவல் நிலையத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.

​அரசு நிர்ணயித்த விலையை மீறி மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வரும் சேல்ஸ்மேனை, தட்டிக் கேட்ட எளிய தொழிலாளி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ள டாஸ்மாக் ஊழியர்களின் ரவுடித்தனமான இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இச்சம்பவம் குறித்து கலவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும்  இந்த சம்பவம் குறித்து கோதண்டன் பேசுகையில் நியாயத்தை தட்டி கேட்ட என்னை கொலைவெரி தாக்குதல் நடத்திய சேல்ஸ்மேன் பாண்டியன் உள்ளிட்ட அனைவர் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்
Previous Post Next Post