ஆற்காட்டில் கஞ்சா விற்பனை, குற்ற செயல்கள் நடைபெறுவதற்கு ஆற்காடு நகர போலீஸ்சாரே காரணம் வி.சி.க நிர்வாகி குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஆற்காடு தண்டு காரன் பகுதியைச் சேர்ந்த
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர பொருளாளர்
அருண் (என்கிற செங்கதிர்) என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
மனு அளித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு கட்டுக்கடங்காமல் உள்ளது. குறிப்பாக 12 வயது முதல் டீன் ஏஜ் பருவத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் அதிகளவில் சீரழிந்து வருகின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன், பெற்றோருக்குப் பெரும் தலைகுனிவும் ஏற்படுகிறது.
கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் பலமுறை மனு அளித்தும், காவல்துறையினர் அதனை ஏற்க மறுத்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அப்பகுதியில் யார்? யார்? கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்தும், அவர்கள் கண்டு கொள்வதில்லை.
ஆற்காடு நகர போலீசார் கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்குப் பதிலாக, அதனை ஊக்குவிக்கும் வகையிலேயே செயல்படுகின்றனர். ஆற்காடு சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களுக்குக் காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கே முக்கியக் காரணமாக அமைகிறது.
கஞ்சா பயன்படுத்தும் 12, 13 வயதுச் சிறுவர்களைப் பிடித்தால் கூட, 'சிறுவர்கள் என்பதால் சிறைக்கு அனுப்ப முடியாது' எனக் கூறி போலீஸ்சார் அவர்களை அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் அவர்கள் மீண்டும் அதே தவறைத் தொடர்கின்றனர். அதற்குப் பதிலாக, அச்சிறுவர்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போலீஸ்சார் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்த அருண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) இதில் தனி கவனம் செலுத்தி, கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.