ஆற்காடு நகராட்சியின் 2-வது வார்டு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பொன் ராஜசேகர், சமீபத்தில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் பொதுமக்களின் அவசியத் தேவைகளுக்காகத் தீவிரமாக குரல் கொடுத்தார்.
நகர்மன்றக் கூட்ட அரங்கில் உள்ள அம்பேத்கர், முதலமைச்சர், காமராஜர் மற்றும் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அகற்றாமல் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், குடிநீர் குழாய் பதிப்பது மட்டுமன்றி இதர பல்வேறு பணிகளுக்காகவும் தோண்டப்படும் சாலைகளை ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடிச் சீரமைக்காமல் விட்டுச் செல்வதால், இருசக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டுச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர் என்றும், அந்தச் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ள புதிய பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த உள்ளூர் வணிகர்களுக்கே மீண்டும் கடைகளை வழங்கிட நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரினார். அத்துடன், நகர்மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, அவை முடிவடைந்ததா இல்லையா என்ற விவரங்களை வெறும் தீர்மானத்தோடு நிறுத்திவிடாமல், ஒவ்வொரு நகர்மன்றக் கூட்டத்திலும் அதனுடைய நடப்பு நிலைக் குறித்துக் கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், பணிகள் முடிந்த பிறகு அதுகுறித்த தகவல்களைச் சரியாக ஒப்படைத்து நிர்வாகம் வெளிப்படையாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் நலனுக்காக நகர்மன்றத்தில் பொன் ராஜசேகர் பேசிய இந்தப் பேச்சு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.