​வாலாஜா நகராட்சியில் 13 ஆண்டுகளாக தொடரும் RC'சந்திரசேகரின்' ராஜ்ஜியம்:


அதிகாரிகளின் செல்லப் பிள்ளை... நகராட்சியின் எஜமான்!
​வாலாஜாபேட்டை:
அரசுத் துறை அலுவலகங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியாளர்கள் இடமாறுதல் செய்யப்பட வேண்டும் என்பது அரசு விதிமுறை. ஆனால், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் 'அசைக்க முடியாத சக்தியாக' வலம் வந்துகொண்டிருக்கிறார் 'பதிவரை எழுத்தர்' (Record Clerk) சந்திரசேகர்.

அரசு பதிவேடுகளைப் பராமரிப்பது மட்டுமே இவரது பணி வரம்பு. ஆனால், வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் சந்திரசேகரின் கண் அசைவிலேயே நடப்பதாகப் புகார்கள் வெடிக்கின்றன. நகராட்சிக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வது, வரி வசூலிப்பது, நகராட்சி கடைகளை ஏலம் விடுவது என சகல அதிகாரங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். நகராட்சிப் பணிகளைத் தாண்டி, அலுவலகமே இவரது ஆலோசனையின் பேரில்தான் இயங்குகிறது என்றால், இங்கு அதிகாரிகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

நகராட்சி அலுவலகத்தை தனது சொந்த வீடு போல பயன்படுத்தி வரும் இவர், தனக்குச் சொந்தமான மின்சார வாகனத்திற்கு மணிக்கு கணக்கில் நகராட்சி அலுவலக மின்சாரத்திலேயே சார்ஜ் போட்டு வருகிறார். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அலுவலகத்தில் பகிரங்கமாக மின்திருட்டில் ஈடுபட்டு வரும் இவரைத் தட்டி கேட்க எந்த அதிகாரிகளுக்கும் துணிவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

அலுவலகப் பணியை விட, இவர் 'கந்துவட்டி' தொழிலில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சில உயர் அதிகாரிகளின் பெருந்தொகையையும், தனது பணத்தையும் வெளியில் வட்டிக்கு விட்டு கல்லா கட்டி வருகிறார். இதன் மூலம் அதிகாரிகளைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார் என்பதாக சொல்லப்படுகிறது

​இதுமட்டுமன்றி, நகராட்சிச் சார்ந்த ரகசிய ஆவணங்கள் தேவைப்படும் அரசியல்வாதிகள் மற்றும் நபர்களிடம் ரகசியமாகப் பெருந்தொகை பெற்றுக்கொண்டு, அரசு ஆவணங்களை நகலெடுத்துக் கொடுத்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இவர் நகராட்சி ஊழியர் அல்ல... ஒரு கந்து வட்டிக்காரர்!" என சக ஊழியர்களே முணுமுணுக்கும் அளவுக்கு இவரது ஆதிக்கம் எல்லை மீறியுள்ளதாக தெரிகிறது

இவரைப் பற்றி மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கைகளில் சந்திரசேகர் ஈடுபடுவதால், மற்ற ஊழியர்கள் அச்சத்தில் அலறி ஒதுங்கிக் கொள்வதாக சொல்லப்படுகிறது சந்திரசேகரை "கவனித்தால்" மட்டுமே காரியம் நகரும் என்ற நிலை உருவாகியுள்ளதால், சாதாரண மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுப் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் நகராட்சியின் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளன.

13 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு, அரசு விதிகளை மீறி, மின்திருட்டு, கந்துவட்டி தொழில் மற்றும் ஆவண முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் நகராட்சியின் 'செல்லப் பிள்ளை' சந்திரசேகர் மீது மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகத் துறையின் உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு தீவிர விசாரணை நடத்த வேண்டும்; அவரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கொதிப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post