ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே, தற்போது ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தப்படும் இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சிறிய பேருந்து நிலைய நிழற்குடை பராமரிப்பின்றி மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்த நிழற்குடையின் மேற்கூரை முற்றிலுமாக உடைந்து பாழடைந்துள்ளதால், வெயில் காலத்தில் சூரிய ஒளி நேரடியாகத் தாக்குவதோடு, மழைக்காலத்தில் மழைநீர் முழுமையாக உள்ளேயே கொட்டுகிறது. இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்குக்கூட இடமின்றி கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தரமற்ற முறையில் இந்த நிழற்குடையை அமைத்த ஒப்பந்ததாரரின் அலட்சியப் போக்கும், அதைச் சரிவரக் கண்காணிக்காத அதிகாரிகளின் கவனக்குறைவுமே இந்நிலைக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இந்த நிழற்குடையைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழுதுபட்ட மேற்கூரையைச் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.