ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில், 46-ஆம் ஆண்டு ஆடி மாத 4-ஆம் வெள்ளிக்கிழமை திருவிழா மிக விமர்சையாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.
இச்சிறப்புமிக்க விழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே தீவிர விரதமிருந்த 1,500-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பக்தர்கள் வன்னிவேடு பாலாற்றங்கரையில் ஒன்றாகக் கூடினர். அங்கு விதவிதமான புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான பூக்கரகத்திற்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அனைவரும் பக்தி முழக்கமிட்டுத் தங்களது கைகளில் காப்பு கட்டி நேர்த்திக்கடனைத் தொடங்கினர்
பக்தர்களில் பலர் தங்களது உடம்பில் பல்வேறு அளவிலான அலகுகளைக் குத்திக்கொண்டும், சிலர் அந்தரத்தில் தொங்கியபடி தங்களது மெய்சிலிர்க்க வைக்கும் பக்தி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, பால்குடங்களைத் தலையில் சுமந்தவாறு பக்தர்கள் பாலாற்றங்கரையிலிருந்து புறப்பட்டனர். மங்கள வாத்தியங்கள் மற்றும் பம்பை மேள தாளங்கள் முழங்க, பூக்கரகம் முன்னால் செல்ல, அலகு குத்திய பக்தர்களும் அணிவகுக்க முக்கிய சாலைகள் வழியாகச் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு பக்தர்கள் பேரணியாகக் கோவில் வந்தடைந்தனர். ஊர்வலம் சென்ற வழியெங்கும் பொதுமக்கள் பக்தர்களுக்குக் குளிர்ந்த தண்ணீரும் பானக்கமும் வழங்கிச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கோவிலைச் சென்றடைந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து கருவறையை அடைந்தனர். அங்குத் தங்களது சொந்தக் கரங்களாலேயே கருவறையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ படவேட்டம்மனுக்குப் பால் ஊற்றிச் சிறப்பு அபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அபிஷேகம் நிறைவுற்றதும் அம்மனுக்குச் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் அனைவரும் அம்மனை மனமுருகி வழிபட்டுச் சென்றனர். விழாவின் நிறைவாகத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனால் வாலாஜாபேட்டை பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டு பக்தி வெள்ளத்தில் மிதந்தது.