திருச்சி ஜுலை 30
திருச்சி பெரிய மிளகு பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்உள்ள ப.மாணிக்கம் இல்லத்தில் இயங்கும் ஜனகம் இஸ்மாயில் அரங்கத்தில் ஏ ஐ டி யு சி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது
இக் கூட்டத்திற்கு சங்க மாநில துணைத் தலைவர் மீனாள் சேதுராமன் தலைமை வகித்தார் .
தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏஐடியுசி - தேசிய, மாநில முடிவுகளையும், அரசியல் நிலைமைகளையும் விளக்கிப் பேசினார்.
சம்மேளன பொதுச் செயலாளர் பி.எல் ராமச்சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் சம்மேளன மாநில துணைத் தலைவர்கள் சங்கையா, ஆதேவராஜ், கே.மணி, மராமாநிதி, செயலாளர்கள் சின்னசாமி, மணியன், தண்டபாணி, கிருஷ்ணசாமி மற்றும் ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் கே.சுரேஷ் உள்ளிட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழில் ரீதியான சம்மேளனங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) அமைப்புகளின் சார்பில் 29.07.2026 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற தொழிலாளர்கள் - விவசாயிகள் தேசிய மாநாட்டு அறைகூவல்படி, வரும் 10.08.2026 அன்று நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தில் ஏஐடியுசி உள்ளாட்சித் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு அண்மையில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் - பொது - கூட்டாண்மை (Puplic - Private - partnership - PPP) முறையில் மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரியது. இதனை கைவிட வலியுறுத்தி ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனை ஏற்று, ஒப்பந்தப் புள்ளி கோரியதை ரத்து செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிப்பதோடு, உள்ளாட்சித் துறையில் எந்தப் பெயரிலும் ஒப்பந்த தொழிலாளர் முறையை அமல்படுத்தக் கூடாது என கூட்டம் வலியுறுத்துகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் மேற்கொள்ளவும், இனி மேல் பணி நிரந்தரம் இல்லை என்றும், காலியாகும் நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் அனைத்தையும் (GO No's: 111,112,113,116, 152,10,139 உள்ளிட்டவை) உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் காண்ட்ராக்ட், அவுட் சோர்சிங், சுய உதவிக் குழுக்கள் போன்ற பல்வேறு பெயர்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் என்றும், தற்போது பல்வேறு பெயர்களில் பணியாற்றி வரும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அனைவரையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் நேரடி பணியாளர்களாக்கி, அதில் 480 நாட்கள் பணியாற்றிய அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
# உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு, 1948 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால், அரசாணை எண் 62, நாள்:11.10.2017 மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும்.
மேலும், மேற்கண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் உள்ளாட்சித் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக உயர்த்தி திருத்தியமைக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கும் போது விலைவாசி உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து, வாழ்க்கை செலவினங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.42,000/-க்கு குறைவில்லாமல் நிர்ணயித்து அமலாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அனைவரையும் வருங்கால வைப்பு நிதி (PF), தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (ESI)திட்டங்களில் உறுப்பினராக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், PF, ESI திட்டங்களுக்காக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளையும், நிர்வாகத் தரப்பில் செலுத்த வேண்டிய பங்குத் தொகைகளையும் உரிய அரசு அலுவலகங்களுக்கு செலுத்தாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏற்று அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் 12.08.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள உள்ளாட்சி அமைப்புகள் முன்பும் சக்திமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.