திமிரி :- ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி இராமபாளையம் ரோடு, அம்மன் நகர் பகுதியில் புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
எங்கள் பகுதியில் ஏற்கனவே 300 மீட்டர் சுற்றளவில் இரண்டு செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் சார்பில் 3-வதாக மற்றொரு செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாடகை வருமானத்திற்காக, அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் டவர் அமைக்கத் தனது நிலத்தைக் கொடுக்க உடன்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமாக வேறு இடங்களில் தனி நிலங்களும், பேரூராட்சியில் வணிகக் கடைகளும் உள்ள நிலையில், பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் குடியிருப்பு பகுதியைத் தேர்வு செய்து நிலம் வழங்கியுள்ளார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளையும் இவர் தன்வசம் வைத்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டவர் அமைக்கப்படும் பகுதிக்கு அருகில் ஏராளமான சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் இதய நோயாளிகள் வசசித்து வருகின்றனர். புதிய டவரிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்களின் உயிருக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த புதிய செல்போன் டவர் அமைக்கும் பணியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அம்மன் நகர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.