நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் ஒன்றியம் ஆழியூர்,புலியூர்,
கடம்பறவாழ்க்கை கிராமங்களில் தரிசாக கிடைக்கும் விளைநிலங்களை பார்த்து மனமுடைந்துள்ள விவசாயிகளை சந்தித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர் பாண்டியன் கலந்துரையாடியபின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததா வது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் சென்ற ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டு 2 லட்சம் ஏக்கர் அளவில் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
சுமார் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் தரிசாக கிடக்கிறது. அதனை பார்த்து விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட கிராமங்களில்
மிகப்பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் குழுவை அனுப்பி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்திடம் வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 தினங்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிக்க காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக உத்திரவிட்டு தண்ணீரை பெற்றுத் தர வேண்டும்.
கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழத்துக்கு விடுவிக்க கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளார்இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகம் தண்ணீரை திறக்க மறுத்தால் காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் ஆணையம் மத்திய அரசின் உதவியை ஆணையம்
கோர வேண்டும்.
அவ்வாறு உதவி கோரும் பட்சத்தில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று தர ஆணையத்திற்கு தேவையான உதவி வழங்க வேண்டும்.
சென்ற ஆண்டு குறுவை கொள்முதல் செய்த நெல் இதுவரையிலும் அரவை செய்து அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு பயன்படுத்தாமல் வீணாகிவிட்டது. இந்நிலையில் நடப்பாண்டு சம்பா மற்றும் கார் குறுவை கொள்முதல் நெல்லோடு கலந்து அரவை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது ஏற்க முடியாது.சென்ற ஆண்டு குறுவை நெல் உணவுக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு வீணாகி விட்டது. எனவே அதனை பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது.அரிசி அரவையாளை உரிமையாளர்களையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
காங்கிரஸ் கட்சி மேகதாட்டு அணை குறித்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களோடு கலந்து பேசுவதாக கூறி நேற்றைய தினம் டெல்லியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் அழைத்தால் திமுக,அதிமுக பங்கேற்காது என்பதை தெரிந்து இருந்தும் திட்டமிட்டு தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பிரிவினையை உருவாக்கும் நிலையில் நேற்றைய கூட்டம் நடைபெற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடையை உருவாக்கியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் பிஜேபியும் இரு துருவங்களாக இருந்தாலும், மேகதாட்டு பிரச்சனையில் ஒன்றுபட்டு தமிழகத்தை அழிப்பதற்கு கைகோர்த்துள்ளனர்.தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை பிளவு ஏற்படுத்தி கர்நாடகாவிற்கு ஆதரவான மறைமுக சதியில் தமிழக காங்கிரஸ் கட்சி ஈடுபடுதோ? என விவசாயிகள் அஞ்சுகிறார்கள். இது மாதிரியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி கைவிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை மூலமாக ஆணையத்தின் உத்தரவு ஏற்று தண்ணீரை திறக்க கர்நாடக முதலமைச்சருக்கு உரிய அறிவுரைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார்.
நாகை மாவட்ட தலைவர் ஆர்பி. பாலசுப்பிரமணியன், உயர்மட்ட குழு உறுப்பினர் சண்முகம்,நாகை ஒன்றிய செயலாளர் செல்லப்பா, தலைவர் வேலாயுதம்
உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.