வாலாஜா:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், வாலாஜா பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை எண் 123-ன் படி நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு வாலாஜா வட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குப்பன், வட்ட இணைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட பொருளாளர் குமரேசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் வட்ட பொருளாளர்கள் சொக்கலிங்கம், தயாளன் மற்றும் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கண்டன விளக்க உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட கிளை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக வட்ட இணைச் செயலாளர் காந்தி கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.