கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தில், ஆற்காடு - செய்யார் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், கேஸ் கட்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை அதிரடியாக உடைத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த 7.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வேலூர் டிஐஜி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்க, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.