தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உட்பட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.
இந்த அணையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி மற்றும் தேக்கடி ஆகிய சுற்றுலாத் தலங்களில் உள்ள விடுதிகள், உணவகங்கள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஆற்றில் கலக்கின்றன.
இது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனையறிந்து, தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கழிவுநீர் கலக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இதற்கு முன்னால் இருந்தவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும், நாங்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காகத் தமிழகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும், கேரளத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் இணைந்து போராட்டம் நடத்துவோம்."
மேலும், இதில் அலட்சியமாகச் செயல்பட்டுள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.......