ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில், அலுவலக உதவியாளர் ஒருவர் அதிகாரிகளுக்கே ‘அல்வா’ கொடுத்துவிட்டு, பொதுமக்களிடம் அலைக்கழிப்பு மற்றும் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வரும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலக உதவியாளர் ஆனால் பில்டப்போ ஓவர்
கலவை பேரூராட்சி அலுவலகத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் அலுவலக உதவியாளராகப் (Office Assistant) பணிபுரிந்து வருகிறார். இவருடைய முக்கிய வேலை அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு தேநீர், சிற்றுண்டி வாங்கித் தருவதும், கோப்புகளை (Files) ஒரு மேஜையிலிருந்து அடுத்த மேஜைக்கு எடுத்துச் செல்வதும் தான். ஆனால், இவர் செய்யும் அராஜகங்களைப் பார்த்தால், இவர்தான் அந்த பேரூராட்சியின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளர் போல பந்தா காட்டி வருவதாகப் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.
ஒரு அலுவலக உதவியாளர் எப்படி இவ்வளவு துணிச்சலாக ஆட்டம் போட முடியும் என்ற கேள்விக்கு பின்னால், பலத்த அரசியல் பின்னணி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ-வாக நீலகண்டன் இருந்த காலகட்டத்தில், கலவை பேரூராட்சி தலைவராக ஜெனார்த்தனன் என்பவர் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த ஜெனார்த்தனனுக்கு, அலுவலக உதவியாளர் ஹரிகிருஷ்ணனின் தந்தை பாபு என்பவர் மிகவும்ங நெருங்கிய நண்பர் ஆவார். பாபுவின் பலத்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அப்போது பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. அப்படிப் பெற்றுத் தரப்பட்டதுதான் இந்த ஹரிகிருஷ்ணனின் அரசு வேலை!
அரசியல் செல்வாக்கு மற்றும் உள்ளூர் ஆதிக்கத்தின் பலத்தால், அரசு விதிகளையே காற்றில் பறக்கவிட்டு, கடந்த 15 ஆண்டுகளாகப் பணி மாறுதல் (Transfer) ஏதுமின்றி இதே கலவை பேரூராட்சியில் ஹரிகிருஷ்ணன் நிலைத்து வருகிறார்.
குடிநீர் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் பொதுமக்களை நுழைவாயிலிலேயே மறிக்கும் ஹரிகிருஷ்ணன்,
ஈ.ஓ (செயல் அலுவலர்) இங்க இல்ல... ஏ.இ (இளநிலை பொறியாளர்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மீட்டிங்குக்கு போயிருக்காங்க... இன்னைக்கு வர மாட்டாங்க, நாளைக்கு வாங்க.
என்று முகத்தில் அடித்தாற்போல் பேசி, தேவையில்லாத வார்த்தைகளால் முகம் சுளித்து திருப்பி அனுப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதிகாரிகள் இல்லை என்று பொதுமக்களை விரட்டும் இதே ஹரிகிருஷ்ணன், மறுபுறம் புரோக்கர் வேலையிலும் களம் இறங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வீட்டு வரி விதிப்பு உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை முடித்துத் தருவதாகக் கூறி, அதிகாரிகளின் பெயரால் பொதுமக்களிடம் பெருந்தொகையைப் பணமாகப் பெற்று அலைப்பறை செய்து வருவதாகப் பொதுமக்களால் குற்றம் சாட்டபடுவதாக கூறப்படுகிறது
காசு கொடுத்தால் வேலை, இல்லையென்றால் அலைக்கழிப்பு என்பதே இவரின் தாரக மந்திரமாக உள்ளது.சொந்த ஊர்
ஹரிகிருஷ்ணன் இதே கலவை பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், இவருடைய தந்தை பாபுவுக்கு அரசியல் பின்புலம் இருப்பதாலும், உள்ளூர் அரசியல்வாதிகள் இவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். "என்னை யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், என் சொந்தக்காரர்களைக் கூட்டி வந்து அலுவலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவேன்" என்று மிரட்டல் தொனியில் இவர் பேசுவதாகவும், இதனால் அங்குள்ள சக ஊழியர்களும், ஏன் அதிகாரிகளுமே இவரைக் கண்டு அஞ்சி நடுங்குவதாகவும் பேரூராட்சி வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசு அலுவலகத்தை, தனது 15 ஆண்டுகால அரசியல் பலத்தைக் காட்டி, ஒரு தனிநபர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வசுல் வேட்டை நடத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் முகாமிட்டு அராஜகம் செய்து வரும் இந்த அலுவலக உதவியாளரை உடனடியாகப் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களிடம் முறையற்ற வகையில் லஞ்ச அலைப்பறையில் ஈடுபடும் இவர் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.