சர்வதேச பிளாஸ்டிக் பையற்ற நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடியல் ஆரம்பம் அறக்கட்டளையின் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும், விலங்குகள் மற்றும் நீர்வளங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகள் மக்க பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதாலும், மண் வளம் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுகின்றன என்பதையும் விளக்கினார்.
மேலும், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும் வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு துணி பை வழங்கினார்
நிகழ்ச்சியின் நிறைவில், "பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்போம்; துணிப் பைகளைப் பயன்படுத்துவோம்; பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்" என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, குமாரபாளையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செளடேஸ்வரி, ஜமுனா, தீனா, தனலட்சுமி,சுந்தாரம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.