தமிழக அரசு சார்பாக இன்று போலியோ தடுப்பு சொட்டு மருத்து கொடுக்கும் பணியில் பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடம் என பல இடங்களில் சுகாதாரதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில் காலை 7 மணி அளவில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்விற்காக காலை 6:30 மணிக்கே குழந்தைகளுடன் தாய்மார்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் வர காலதாமதமானதால் குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் துணை சுகாதார நிலையம் முன்பு வெயிலில் காத்திருந்தனர்.
7.25 மணியளவில் வந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்த பின்பு காத்திருந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து சென்றனர்.
குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அரசு அதிகாரிகள் உரிய நேரத்தில் வந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வருகை தர ஏற்பட்ட காலதாமதத்தால் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை வெயிலில் காத்திருந்த தாய்மார்கள் அங்கிருந்து முணுமுணுத்துச் சென்றனர்.....