துறையூர்:- திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள பச்சைமலைப் பகுதியில் மூலக்காடு முதல் செம்பூரிச்சாம்பட்டி வரை இருவழிச் சாலை அமைத்துத் தரக் கோரி கோம்பை மற்றும் வண்ணாடு கிராமப் பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பச்சைமலைப் பகுதியில் சுமார் 32 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இப்பகுதியில், 3,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
மலைப் பகுதியில் தற்பொழுது உள்ள சாலை மிகவும் குறுகலாகவும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் பேருந்துகள், மினி வேன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் 108 அவசர ஊர்தி போன்றவை எதிர் எதிரே வரும்போது ஒதுங்கிச் செல்ல வழியின்றி பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நேரிடுவதால் மூலக்காடு முதல் செம்பூரிச்சாம்பட்டி வரை உள்ள சாலையை உடனடியாக இருவழிச் சாலையாக விரிவுபடுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அத்துடன், அப்பகுதியில் செல்போன் டவர் சரிவரச் செயல்படாததால் அவசரக் தேவைகளுக்கும், மாணவர்களின் கல்விக்கும் பெரும் தடையாக உள்ளதாகவும், BSNL சேவையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளுக்காகப் பச்சைமலைப் பகுதியிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசவ மருத்துவமனை மற்றும் அரசுச் சான்றிதழ்களை எளிதில் பெற புதிய இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரம், விவசாய முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இக்கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோம்பை மற்றும் வண்ணாடு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.