அடுத்தடுத்து இரண்டு பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. இந்த ஏரிகளில் அரசாணையை முற்றிலும் மீறி, ஜே.சி.பி (JCB) எந்திரங்கள் மூலம் இரவு பகலாக ஏரியின் மார்பு பிளக்கப்பட்டு, ஆழமாக மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கூடுதலாக, பிரம்மாண்ட டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் மண் கடத்தப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் விவசாய நிலங்களில் கொட்டப்படுவது போல் காட்டிவிட்டு, இரவு நேரங்களில் அதே மண்ணை டிராக்டர்கள் மூலம் பல்வேறு வணிக இடங்களுக்கு எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரிகளில் விதிகளை மீறி ராட்சத எந்திரங்கள் கொண்டு ஆழமாகத் தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஏரியின் சமதளம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிணறு போல ஆழமான பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஏரி முழுவதும் பரவலாகத் தேங்காமல், அந்தப் பள்ளங்களுக்குள் மட்டுமே முடங்கிவிடும்.
ஏரிப் பரப்பு முழுவதும் தண்ணீர் தேங்காததால், சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாய வேண்டிய பாசன நீர் முற்றிலுமாகப் பாதிக்கப்படும். மேலும்
நீர் பரவாமல் போவதால் சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகச் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களும் பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்தவொரு அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிடவோ அல்லது மண் அள்ளுவதைத் தடுக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த மௌனம், மண் கடத்தல் காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் பலப்படுத்தியுள்ளது.அரசின் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி, ஏரிகளை அழித்து, எதிர்கால விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் சட்டவிரோத மண் கடத்தலை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிறப்புப் படைகளை அனுப்பி, தட்ரஹள்ளி ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபட்ட எந்திரங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இதற்குத் துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், தட்ரஹள்ளி கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.