மத்திய நீர் வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத் காவிரி டெல்டாவை பார்வையிட நேரில் வருகைபிஆர்.பாண்டியன் தகவல்




 மத்திய நீர்வள ஆணைய தலைவர் டெல்டாவை பார்வையிட நேரில் வருகை: பி.ஆர். பாண்டியன் தகவல்*

தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், டெல்லி சேவா பவனில் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம்பிரசாத் மற்றும் மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியான யோகேஷ்பாட்டன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்து, வெறும் உபரி நீரை மட்டுமே விடுவித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்த உபரி நீரையும் தடுத்து காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையைச் சட்டவிரோதமாகக் கட்ட கர்நாடகா முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்த வரைவு திட்ட அறிக்கையை, தங்களுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி மத்திய நீர்வள ஆணையம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் அதனை விவாதிக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது. தற்போது முதலமைச்சராக உள்ள டி.கே.சிவகுமார், இந்தச் சட்டவிரோத மேகதாட்டு அணைக்கு அனுமதி கோரி தொடர்ந்து சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கையைப் பின்பற்றி, மத்திய நீர்வள ஆணையமும் இந்த வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேகதாட்டு அணை கட்டுமானத்தை கர்நாடக விவசாயிகளுமே எதிர்த்து வருகிறார்கள். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழே ஆயிரம் மீட்டர் ஆழத்தில் மேகதாட்டு அணை கட்டப்பட்டால், பற்றாக்குறை காலங்களில் கிருஷ்ணராஜ சாகரில் தண்ணீர் தேக்குவது கைவிடப்படும். அதற்குப் பதிலாக, குடிநீர் என்ற பெயரில் மேகதாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால், இந்த அணை கர்நாடகாவிற்குத் தேவையில்லை என அம்மாநில விவசாயிகள் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளனர். பெங்களூரு தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் தருவதற்காக, தமிழக விவசாயத்தை அழிக்கும் கர்நாடக அரசின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளையோ, நீர்த்தேக்கங்களையோ கர்நாடகா கட்டக்கூடாது என்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு இந்த இறுதித் தீர்ப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சட்டவிரோதமாக மேகதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

நடப்பு 2026 ஆம் ஆண்டில் தமிழக காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதன் காரணமாக, டெல்டா விவசாயிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனர். வருங்காலத்தில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனிடையே, ராசிமணலில் தமிழகம் அணை கட்டிக்கொண்டால், அதன் வலது கரை கர்நாடகாவிற்குச் சொந்தம் என்பதால் தங்களுக்குத் தேவையான குடிநீரை கர்நாடகம் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில், கடந்த 2024-இல் இரு மாநில விவசாயிகளும் மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுத்துள்ள விவரமும் மத்திய அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு 6 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதி வழங்காததால், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றுக்குப் பதிலளித்த அனுபம்பிரசாத் மற்றும் யோகேஷ்பாட்டன்கர், தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். எனினும், ராசிமணல் அணை குறித்து தமிழக அரசு இதுவரையில் தங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று அவர்கள் வினவினர். மேலும், நடப்பாண்டு குறுவைச் சாகுபடிக்கு உரிய தண்ணீர் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கர்நாடகம் தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதையும் அவர்கள் குறிப்பிட்டனர். தொடர்ந்து பேசிய அதிகாரிகள், விரைவில் கர்நாடகாவையும், தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மற்றும் அணைகளையும் நேரில் பார்வையிட வருவதாகவும், அது குறித்து முன்கூட்டியே உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். வெண்ணாறு கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனுமதி தரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது முதல் இன்று வரை நிலவி வரும் பிரச்சனைகளை அதிகாரிகள் மிக விரிவாகக் கேட்டறிந்தனர். விவசாயிகளின் சார்பில் அவர்களுக்கு விரிவான கடிதமும் அளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு தமிழகத்திற்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்தது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். இச்சந்திப்பிற்கு முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் மற்றும் ஆணைய உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத் மற்றும் தொட்டியம் சஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.
Previous Post Next Post