ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கரம்பக்காடு ஜமீன் பகுதியைச் சேர்ந்தவர்கள் லேட்.கோபால் - லேட்.ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு புருஷோத்தமன், பாஸ்கரன், பிரபாகரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் முதல் இரண்டு மகன்களுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், மூத்த மகன் புருஷோத்தமனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் பாஸ்கரனுக்குக் குழந்தைகள் இல்லை. மூன்றாவது மகன் பிரபாகரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
பெற்றோரின் மறைவுக்குப் பின், அவர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முழுமையாகத் தன்வசப்படுத்திக் கொள்ள மூத்த மகன் புருஷோத்தமனும், அவருடைய மனைவி அம்பிகாவும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
துரத்தப்பட்ட இரண்டாம் மகன்; உயிருக்கு போராடும் கடைசி மகன்:
சொத்து ஆசையால், தன் தம்பிகளான பாஸ்கரன் மற்றும் பிரபாகரனை ஒழித்துக்கட்ட புருஷோத்தமன் தம்பதியினர் பல்வேறு வழிகளில் முயன்று வந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இரண்டாவது மகன் பாஸ்கரனுடன் அடிக்கடி வேண்டுமென்றே சண்டை இழுத்தும், செய்வினை செய்தும், பல்வேறு தொல்லைகள் கொடுத்தும் வந்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாஸ்கரன், உயிருக்கு பயந்து கிராமத்தை விட்டே வெளியேறி, தற்போது வேறு ஒரு மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையில், கிராமத்திலேயே இருக்கும் இளைய மகன் பிரபாகரனுக்குச் சரிவர உணவு அளிக்காமலும், உணவில் மெல்லக் கொல்லும் விஷம் (Slow Poison) கலந்தும் கொடுத்து உடல்நிலையைக் கடுமையாகப் பாதிப்படையச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் தற்போது பிரபாகரன் உடல்நலம் குன்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக உள்ளார்.
அதிகாரிகளுக்குக் கோரிக்கை:
மாறிவரும் உலகில் நிலையற்ற சொத்துக்காக உடன்பிறந்த தம்பிகளையே அண்ணனும் அண்ணியும் சித்திரவதை செய்து, சொத்தைப் பறிக்க முயலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உயிருக்குத் போராடும் பிரபாகரனை மீட்டு அரசுப் பராமரிப்பு மையத்தில் சேர்த்து உரியச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், கொலை முயற்சியில் ஈடுபட்ட புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி அம்பிகா ஆகியோர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், மறைந்த பெற்றோரின் சொத்துக்களைச் சட்டப்படி அனைத்துச் சகோதரர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.