80 ஆண்டுகாலக் கண்ணீர்!" - மயானப் பாதையும் இல்லை... குடிக்க நல்ல தண்ணீரும் இல்லை... திமிரி பேரூராட்சியில் பழங்குடி இன மக்கள் நரக வாழ்க்கை


சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டைக் கடந்தும், தமிழகத்தில் ஒரு சமூகமே ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்து வரும் அவலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பேரூராட்சிக்குட்பட்ட கங்கம்மா தோப்பு, மேட்டுப்பகுதி மற்றும் பெஞ்சிராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி இனமான இருளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 இப்பகுதிக்கு 'சின்ன செட்டிக்குளம்' என்ற மறுபெயரும் உண்டு. இந்த பழங்குடி இன மக்கள் சுமார் 80 ஆண்டுகாலமாக இதே இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி பேசும் இந்த காலத்தில், இந்த மக்களுக்கு ஒரு சுடுகாட்டுப் பாதையோ? அல்லது இறந்த உடலை அடக்கம் செய்ய மயான இடமோ? கூட இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை

இப்பகுதியில் யாராவது இறந்துவிட்டால், உடலைத் தூக்கிக் கொண்டு மைல் கணக்கில் அலைந்து, ஏரிப் பகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும் சுடுகாட்டில் பிணத்தைப் புதைக்க வேண்டிய அவல நிலை நீடிப்பதாகவும்
 மழைக் காலங்களில் உடலைத் தூக்கிச் செல்வதற்குள்  மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்கிறார்கள் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள்

 அழுகிய குடிநீர்: நோய்ப் பரப்பும் திமிரி பேரூராட்சி!

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகப் பேரூராட்சி நிர்வாகத்தால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை, அதாவது 40 வருடங்களாக இந்தத் தொட்டி பேரூராட்சி நிர்வாகத்தால் ஒருமுறை கூட சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தொட்டிக்குள் தூசிகள், குப்பைகள் மற்றும் புளியமர இலைகள் விழுந்து, வருடக் கணக்கில் அழுகி, நாற்றமெடுத்துக் கிடக்கிறது. வேறு வழியின்றி, அந்த விஷத் தண்ணீரைத்தான் இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் குடிநீராகவும், மற்ற இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர் மேலும், இந்த தண்ணீர் தொட்டியில் பெரும்பாலும் வேகமாகத் தண்ணீர் வருவதும் கிடையாது.

 இந்த நாற்றம் எடுத்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் இப்பகுதி மக்களுக்குத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் சரி செய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகமோ? கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

ஒரே வீட்டில் 4 குடும்பங்கள்! இடிந்து விழும் அரசு வீடுகள்!

 மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில், போதிய இடவசதி இல்லாததால் ஒரே சிறிய வீட்டிற்குள் 3 முதல் 4 குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக திணறித் திணறி வாழ்ந்து வருகின்றனர். அரசு இப்பகுதி பழங்குடி இன மக்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கிற 'குரூப் வீடுகள்' அனைத்தும் பராமரிப்பின்றி, பாழடைந்து உடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மேலும் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்கவும் வீடு இல்லாதவர்களுக்கு தனி இடம்  தந்து பட்ட வழங்க கோரியும் 

வீடுகளைப் புதுப்பித்துத்  புதிய வீடுகள் கட்டித் கட்டித் தரவும் இப்பகுதி பழங்குடி இன மக்கள் பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்களை அளித்துள்ளதாக கூறுகின்றனர் . ஆனால், நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இதுவரையிலும் அவர்களுக்கு வீடுகளைப் புதுப்பித்துத் தர முன்வரவில்லை. 

அதிகாரிகளின் காகித நாடகம்

அதிகாரிகள் இவர்களின் மனுக்களைக் கண்டும் காணாமல், ஏதோ ஒரு பதிலை அரசு உயர் அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பிவிட்டு மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இப்பகுதி மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. கழிவறைக்குள் உள்ள டைல்ஸ் கற்கள் உடைக்கப்பட்டு, மின் இணைப்பு வசதி இல்லாமல் இருட்டறையாகக் காட்சியளிக்கிறது. தெரு சாலைகளோ, முறையான குடிநீர் பைப்லைன் வசதிகளோ இந்த கிராமத்திற்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் காலம் காலமாக இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சமூக ஆர்வலர்களின் கேள்வி

பழங்குடி இன மக்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்களின் வாழ்வாதாரத்தை ஏன் இப்படி வஞ்சிக்கிறார்கள்? மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, இந்த மக்களுக்குப் புதிய வீடுகள், தூய்மையான குடிநீர், மயான வசதி, கழிவறை வசதி மற்றும் தெருசாலை வசதிகளைச் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்  துறை சார்ந்த அதிகாரிகளின் நடவடிக்கை என்னவாக இருக்கும் பொறுத்திருப்போம் காலத்தின் பதிலுக்காக!...
Previous Post Next Post