தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பட்டா பெயர் மாற்றத்திற்காகப் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை (VAO), லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
சின்ன ஓவுலாபுரம் என்ற பூசாரி கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய உறவினர் லோகராணி என்பவரது நிலத்தின் பட்டாவில், அவரது பெயர் தவறுதலாக 'லோகமணி' என அச்சிடப்பட்டிருந்தது. இந்தப் பிழையைத் திருத்துவதற்காக லோகராணி முறைப்படி இணையதளம் (Online) மூலமாகப் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில், பட்டா பெயர் மாற்ற ஒப்புதலுக்காகக் கம்பம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி என்பவரை அவர் அணுகியுள்ளார்.
அப்போது, இப்பணியை முடித்துக் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகராணி இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி (DSP) நாகராஜன் தலைமையிலான காவல் துறையினர் இன்று கம்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, கனகராஜ் இடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி 5,000 ரூபாய் லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கார்த்தியிடம், லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகை கைது செய்து அழைத்துச் சென்றனர்.....