கோட்டூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிர்கள் குறைந்த மின்னழுத்தம் காரணமாகவும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாகவும் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது பரிதவிப்பு : உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை



திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கோடை பருவத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், குடவாசல், கொரடாச்சேரி, கோட்டூர் முதலான மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தண்ணீர்  அதிகம் தேவையில்லா கோடை பருவ பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவு செய்து பருத்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வந்த நிலையில் பருத்தி செடிகளை பாதுகாத்திட விவசாயிகள் கடுமையாக போராடி  பாதுகாத்து  வந்தனர்.   ஆனால் கடந்த சில வாரங்களாக  அடிக்கடி ஏற்படும்  மின்வெட்டு  மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பருத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்த்த முடியாமல்  விவசாயிகள்  பரிதவித்து வருகின்றனர். அந்த வகையில் கோட்டூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிர்கள் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகவும், குறைந்த மின்னழுத்தம் காரணமாகவும் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச வழியின்றி அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பருத்திப் பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது  மேலும் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணியில் ஈடுபட ஏதுவாக கந்து வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் பருத்தி சாகுபடி மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு விவசாயிகளை விரக்தியில்  ஆழ்த்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அரசு வேளாண் துறை அதிகாரிகளைக் கொண்டு தண்ணீரின்றி காய்ந்து வரும் பருத்தி பயிர்கள் குறித்து கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே பருத்தி விவசாயிகளை காப்பாற்ற முடியும். விவசாயிகளின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு அரசு இழப்பீடு வழங்க முன்வராவிடில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என மனவேதனை தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post