ஆற்காடு அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு அட்டூழியம்: விபத்து அபாயத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகாரிகள் மெத்தனமா?



ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரின் இதயப் பகுதியாக விளங்கும் அண்ணா சாலையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகிலேயே ஆக்கிரமிப்புகள் எல்லை மீறிப் போயுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முக்கிய சாலையில் முடங்கும் போக்குவரத்து

வங்கிகள், மின்சார வாரிய அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெட்ரோல் பங்க் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த அண்ணா சாலையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலக வாசலையே சிற்றுண்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு உணவு உண்பவர்களால், இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள்

தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களால் சாலை குறுகிப் போனதால், ஒவ்வொரு நாளும் சிறு விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர்.

மெக்கானிக் ஷெட்டின் அராஜகம்
"யாரும் ஒன்னும் செய்ய முடியாது" என மிரட்டல்?

அண்ணா சாலை பூந்தளிர் டீக்கடை அருகில், ராமு என்பவர் நடத்தி வரும் இருசக்கர வாகன மெக்கானிக் கடை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளை ஆக்கிரமித்து பெரும் இடையூறாக உள்ளது.
  குறுகிய இடத்தில் கடை வைத்துக்கொண்டு, நெடுஞ்சாலை முழுவதையும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  பழுது பார்க்க வருபவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதோடு, கேள்வி கேட்பவர்களை "நான் லோக்கல்... என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என அவமரியாதையாகப் பேசி அராஜகத்தில் ஈடுபட்டு. பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பார்ப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

துறைகளுக்கிடையே நடக்கும் 'பந்துப் பரிமாற்றம்'

இந்த அவலநிலை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், அவர்கள் ஒருவரை ஒருவர் கைக்காட்டித் தப்பித்து வருகின்றனர்:
  நெடுஞ்சாலைத் துறை: "நகராட்சி நிர்வாகத்திடம் சொல்லுங்கள்" என்கிறார்கள்.
  நகராட்சி நிர்வாகம்: "எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, நெடுஞ்சாலைத் துறையிடம் முறையிடுங்கள்" எனப் பதிலளிக்கின்றனர்.
  காவல்துறை: போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய வேண்டிய காவல்துறையினர் மௌனம் காப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசியல் தலையீடு?

ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படும்போது, சில அரசியல் கட்சியினர் (திமுகவினர்) வந்து தடுத்து நிறுத்தி அராஜகம் செய்வதாகவும், "யார் கடையை எடுக்கிறார்கள் என்று பார்த்துவிடுகிறோம்" எனச் சவால் விடுவதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகளே கைகட்டி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அரசியல் அழுத்தம் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

தொடர் விபத்துகளையும், பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும். அண்ணா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றி, விபத்துகளே இல்லாத சாலையாக மாற்ற வேண்டும் என்பதே ஆற்காடு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Previous Post Next Post