கல்லா கட்டும் கிடங்கு: மாதம் 20 லட்சம் 'கட்டிங்' போடும் வாலாஜா வட்டார பொறுப்பாளர் குணசேகரன்ரேஷன் அரிசி மூட்டைகளில் கைவரிசை - அதிர்ச்சியில் விற்பனையாளர்கள்!



ராணிப்பேட்டை:
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், இன்று சில அதிகாரிகளின் முறைகேடுகளால் ஊழல் கூடாரங்களாக மாறி வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு சாலையில் இயங்கி வரும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், பல லட்ச ரூபாய் ஊழல் அரங்கேறி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

யார் இந்த 'வசூல் ராஜா' குணசேகரன்?

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிடங்கின் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக மாவட்ட மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர். பொறுப்புக்கு வந்த குறுகிய காலத்திலேயே, விதிகளுக்குப் புறம்பாக வருமானத்தைப் பெருக்கத் தொடங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எடையில் திருட்டு: மாதம் 12 லட்சம் கொள்ளை!
இந்தக் கிடங்கின் மூலம் 220 ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் கோதுமை விநியோகிக்கப்படுகிறது. மாதந்தோறும் சுமார் 2,200 டன் அரிசி, 120 டன் பருப்பு எனப் பல பொருட்கள் வருகின்றன. ஆனால், விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு மூட்டையிலும் திட்டமிட்டு எடையைக் குறைக்கிறார் குணசேகரன்.

 அரிசி: மூட்டைக்கு 2 கிலோ குறைப்பதன் மூலம் மாதம் ₹9,60,000 வரை முறைகேடு.
  பருப்பு & சர்க்கரை: எடையைக் குறைத்து அனுப்புவதன் மூலம் மாதம் ₹2,50,000 வரை சுருட்டல்.
   ஒட்டுமொத்தமாக மூட்டைகளில் எடையைக் குறைப்பதன் மூலமே மாதத்திற்கு 12 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை அவர் 'கட்டிங்' போடுவதாகக் கூறப்படுகிறது.

லாரி உரிமையாளர்களிடம் கட்டாய மாமூல்!

முறைகேடுகள் இதோடு நின்றுவிடவில்லை. கிடங்கிற்கு வரும் சுமார் 100 லாரிகளிடம், லோடு ஏற்றுவதற்கு அனுமதி வழங்க தலா ₹2,500 வீதம் மாதத்திற்கு ₹2,50,000 'கிம்பளமாக' (லஞ்சமாக) வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரிசி ஆலைகளுடன் (Rice Mills) ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, அங்கு வரும் லாரிகளிலும் எடையைக் குறைத்துக் காட்டி மாதம் ₹7,87,500 வரை தனிப்பட்ட வருமானம் ஈட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

"என்னை யாரும் அசைக்க முடியாது" - அதிகாரத் திமிர்!

இது குறித்துப் பாதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் முறையிட்டால், "ஊரில் பெண்டாட்டி பிள்ளைகளை விட்டுவிட்டு இங்கு சும்மா வேலை செய்ய வரவில்லை. மேலதிகாரிகளுக்கு உரிய பங்கைக் கொடுத்தால்தான் நான் இங்கு இருக்க முடியும். என் உறவினர்கள் பலரும் இதே துறையில் உயர் பதவியில் உள்ளனர், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" என்று ஏகத்தாளமாகப் பேசி வருவதாக விற்பனையாளர்கள் மனக்குமுறலுடன் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகம் தூங்குகிறதா? சமூக ஆர்வலர்கள் கேள்வி!

சுமார் 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் மாதந்தோறும் ஊழல் செய்து வரும் ஒரு அதிகாரி மீது, கடந்த சில மாதங்களாகச் செய்திகள் வெளிவந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குணசேகரன் கூறும் "உயர் அதிகாரிகளின் ஆதரவு" உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, இந்தக் கிடங்கு பொறுப்பாளரின் சொத்து விபரங்கள் மற்றும் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பைத் தவிர்க்க முடியும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
Previous Post Next Post