வாலாஜாபேட்டையில் தரமற்ற முறையில் சிமெண்ட் சாலைப் பணி: பொதுமக்கள் கடும் அவதி - அதிகாரிகள் மெத்தனப்போக்கு என புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் மிகுந்த அலட்சியத்துடனும், தரமற்ற முறையிலும் நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்




விதிமீறல் மற்றும் அவசர கதி:

வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, தேசாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாகச் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட பிறகு, அது போதிய அளவு காயும் வரை வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படக் கூடாது. ஆனால், தேசாய் தெருவில் சாலை அமைக்கப்பட்ட அதே நாளிலேயே கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால்,

 சாலையின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

 பணிகளை அவசர கதியில் முடிப்பதிலேயே ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து அபாயம்:

பூசாரி பச்சையப்பன் தெருவில் (மஞ்சள் காமாலை தெரு) சாலைப் பணிக்காகக் கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், எம்-சாண்ட் மற்றும் சிமெண்ட் மூட்டைகள் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாகச் சாலையை முழுமையாக அடைத்து இந்தப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், பொதுச் சாலையிலேயே ஜல்லிக் கலவைகளை (Mixing) தயாரித்து வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது, சாலைகளில் ஜல்லிக் கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு:

இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சிப் பொறியாளர் (ME) மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் (ORC) ஆகியோருக்குப் புகார் அளித்தும், அவர்கள் இதுவரை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை எனத் தெரிகிறது. அதிகாரிகளின் இத்தகைய மெத்தனப் போக்கால் அரசுப் பணம் வீணடிக்கப்படுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்து, தரமான சாலை அமைப்பதற்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் களைவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Previous Post Next Post