ராணிப்பேட்டை: கலவை பேரூராட்சி பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல், தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இலக்கு வைத்து சாதி ரீதியான பாகுபாட்டுடன் செயல்படுவதாக எழுந்துள்ள புகார் சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தது என்ன?
விழாவின் போது, கலவை அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமூக இளைஞர்களிடையே எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
காவல்துறை மீது சுமத்தப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள்:
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள்
சாதிய இழிவுபடுத்தல்: மோதலில் ஈடுபட்ட இளைஞர்களில், தலித் இளைஞர்களை மட்டும் குறிவைத்து காவல்துறையினர் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த இளைஞர்கள் எதிர்வினையாற்றிய போது, அதை மட்டும் ஆடியோ வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள் மீது காவல்துறை வன்மத்தை கக்கியுள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கை:
"உங்களை ஒழித்து விடுவேன்"
என்று மிரட்டிய போலீசார், மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, திருவிழாவிற்கு வந்திருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற சண்டையில் ஈடுபடாத வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி தலித் இளைஞர்களையும் தேடித் பிடித்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
பொய் வழக்குகள்:
இரவும் பகலும் தூக்கமின்றி, முறையான விசாரணை இன்றி அப்பாவி இளைஞர்களைப் பிடித்து வந்து பொய் வழக்குகளில் போலீசார் சிக்க வைப்பதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமாதானத்தை நிராகரித்த காவல்துறை:
"நாங்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்; அண்ணன் தம்பிகளாகப் பழகி வருகிறோம். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்கிறோம், வழக்குப் பதிவு செய்ய வேண்டாம்" என இரு சமூகப் பெரியோர்களும் கலவை கலவை போலீசாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், உதவி ஆய்வாளர்கள் அமரேசன், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் இந்தச் சமரச முயற்சிகளை முற்றிலும் நிராகரித்துவிட்டு, பழிவாங்கும் நோக்கத்தோடு FIR பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் சண்டையை வலித்த சாதி இந்துக்கள் வாலிபர்கள் இதுவரையும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இது போலீசாரின் ஒருதலைப் பட்சத்தை காட்டுகிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்
மேலும், சிறையில் இருக்கும் இளைஞர்களை ஜாமீனில் எடுக்கத் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு:
சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காவல்துறையே, சாதி மற்றும் மத ரீதியான பாகுபாட்டுடன் செயல்படுவது ஜனநாயகத்திற்குப் புறம்பானது.
"சாதி வெறியோடு செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது ராணிப்பேட்டை மாவட்ட உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும்" என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
>