ஒரே சமூகத்திற்குள் பிரிவினை உண்டாக்கும் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

​ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள மேலப்புலம்புதூர் ஊராட்சி, பெரிய தெரு என்றழைக்கப்படும் சன்னதி தெருவில் பாரம்பரியமிக்க சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் கிராம பொதுமக்கள் ஒன்றுதிரண்டு விமரிசையாக திருவிழா நடத்தி வருவது வழக்கம். இத்திருவிழாக்களின் போது உபயதாரர் ஒருவரை நியமித்து, சன்னதி தெருவைச் சேர்ந்த கிராமணிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விழாவினை நடத்தி வந்துள்ளனர்.

​கடந்த 12 ஆண்டுகளாக இத்திருக்கோயிலின் உபயதாரராகச் செயல்பட்டு வந்த பெரிய தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் அண்மையில் காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது இளைய சகோதரரும் நடுத்தெருவைச் சேர்ந்தவருமான நீலகண்டன் என்பவர், பொதுமக்களிடையே தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. சன்னதி தெருவைச் சேர்ந்தவர்கள் திருவிழாவை நடத்தக் கூடாது, யாகசாலைப் பூஜைகளில் பங்கேற்கக் கூடாது என்றும், உபயதாரர் மற்றும் கிராமணிகளாகத் தங்களது தரப்பு மட்டுமே செயல்படும் என்றும் கூறி தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

​இதுகுறித்து சன்னதி தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இரு தரப்பினரும் கோயில் நிர்வாகத்தை நடத்த வேண்டியதில்லை, துறையின் சார்பில் அதிகாரிகளே பார்த்துக்கொள்வதாகக் கூறி விவகாரத்தை தற்காலிகமாக முடித்து வைத்துள்ளனர்.

​ஆனாலும், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அண்ணாமலை என்பவர், நடுத்தெருவைச் சேர்ந்த நீலகண்டனுடன் சேர்ந்து கொண்டு, தற்போது நடைபெறவுள்ள திருவிழா அழைப்பிதழில் நடுத்தெருவின் பெயரை மட்டும் சேர்த்துவிட்டு, கோயில் அமைந்துள்ள சன்னதி தெருவைப் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருவதாகச் சன்னதி தெரு பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

​இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அழைப்பிதழ் அச்சிடாமல் திருவிழாவை நடத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி, திட்டமிட்டே சன்னதி தெருவைப் புறக்கணித்து நடுத்தெருவின் பெயரை மட்டும் குறிப்பிட்டு அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

​எனவே, பொதுமக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டும் வகையில் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அண்ணாமலையின் மீது துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post