ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட 5 மற்றும் 6-வது வார்டு பகுதிகளான தஞ்சாவூரான் காலனி, பாக்தினி, டி.எம். ஷாப் லைன் மற்றும் பழைய ஆட்டுத் தொட்டி ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழப்பவர்களின் உடல்களை, பாலாற்றங்கரையொட்டி அமைந்துள்ள மயானப் பகுதியில் பொதுமக்கள் காலங்காலமாக அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் மயானபகுதி அருகிலேயே மேல்விஷாரம் நகராட்சியின் குப்பை கிடங்கும் செயல்பட்டு வருகிறது. இங்குச் சேகரிக்கும் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கும் நிலையில், இக்குப்பைகளைத் தரம் பிரிக்கும் ஒப்பந்தத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘பை மேன்’ (Bioman) என்ற நிறுவனம் பெற்று நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்றைய முன் தினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மயானப் பகுதியில் குப்பைகள் அள்ளி கொட்டப்பட்டு, திடீரென புதிய குப்பைமலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மயானத்திற்குள் இருந்த கல்லறைகளை இடித்து சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த மரம், செடி, கொடிகளையும் பிடுங்கி அகற்றியுள்ளனர். தொடர்ந்து மயான இடத்திலேயே குப்பைகளைக் கொட்டி தரம் பிரிக்கவும் புதிய திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பை கொட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த 5 மற்றும் 6-வது வார்டு பொதுமக்கள், திரளாக மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று ஆணையரிடம் முறையிட்டு புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த நகராட்சி ஆணையர், விரைவில் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொள்வதாகவும், மயான பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, இனிமேல் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். ஆணையரின் இந்த உறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.