குமரிகிரி மலை அடிவாரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தவிக்கும் 60 குடும்பங்கள்! - அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு குமரிகிரி மலை அடிவாரப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த பல ஆண்டுகளாகக் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்குக் கூடத் தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீர் பிரச்சனை தொடர்பாகத் திமிரி பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை நேரில் சென்றும், மனுக்கள் வாயிலாகவும் முறையிட்டுள்ளனர். இருப்பினும், இதுநாள் வரையில் துறை சார்ந்த அதிகாரிகள் எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில்  நாள் ஒன்றுக்கு வெறும் 5 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. 60 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் 5 குடம் தண்ணீர் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என கேள்வி எழுப்பும் மக்கள், அதிகாரிகள் இந்த 5 குடம் தண்ணீர் வருவதை மட்டுமே வீடியோ பதிவு செய்து, "குடிநீர் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டது" என உயர் அதிகாரிகளுக்குக் கணக்குக் காட்டித் தப்பித்து வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதியில் நாள்தோறும் மக்களிடையே வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்பட்டு வருகின்றன. பள்ளிச் செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் தண்ணீருக்காகப் போராடும் அவலநிலை நீடிக்கிறது.

​அருகிலுள்ள விவசாயக் கிணறுகளுக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றால், நிலத்தின் உரிமையாளர்கள் தவறாகப் பேசி, தண்ணீர் எடுக்க விடாமல் விரட்டுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

​மேலும், பகுதியில் யாராவது இறந்துவிட்டால், சடலத்தைக் குளிப்பாட்டுவதற்கு கூடத் தண்ணீர் கிடைக்காமல், அக்கம் பக்கத்தினரிடம் கையேந்தி மிகவும் சிரமப்பட்டே இறுதிச்சடங்குகளைச் செய்யும் அவலநிலை நிலவுவதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, குமரிகிரி மலை அடிவாரப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post