*மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வனத்துறையினரின் கெடுபிடிகளை நீக்க வேண்டும், 118 அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட தவறான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும், மலை கிராமங்களில் நிறுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மலை கிராம மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வன உரிமை குழுக்கள் சார்பில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.*
தேனி மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்– மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரம் கடந்த 4 மாதங்களாக தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்
இதில் கண்டனம் தெரிவித்து வருசநாடு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராம பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், காந்தி ஜெயந்தியான இன்று கடமலை–மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.இதில் வருசநாடு, தும்மக்குண்டு, முருக்கோடை, சிங்கராஜபுரம், மேகமலை, பொன்னன்படுகை உள்ளிட்ட 13 ஊராட்சிகளில் மலை கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வன உரிமை குழு–2006 சார்பில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன்,
கிராம சபை மேற்பார்வையாளர் உம்முல் ஜாமியா ஆகியோரிடம் அளித்தனர்.
அந்த மனுவில், "வனத்துறையால் முடக்கப்பட்ட சாலை வசதி, வீடு கட்டுதல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் கடமலைக்குண்டு, மஞ்சனூத்து சோதனை சாவடிகளில் விதிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு, உறவினர்கள் வந்து செல்வதற்கான தடை, ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கான தடை போன்ற மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் கெடுபிடிகளை தகர்க்க வேண்டும் விவசாய நிலங்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், மலை மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேய்வதற்கு நிபந்தனையற்ற அனுமதி தருதல்
புலிகள் காப்பக வழக்கில் 118 அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட தவறான வழக்கை திரும்ப பெறவேண்டும் அனுபவத்தில் உள்ள அனைவருக்கும் வீட்டுமனை, நிலப்பட்டாவை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் வனக்குழுவினர் அளித்த இந்த மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள், அதனை அதிகாரிகள் கிராம சபை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்தனர்.
ஒட்டு மொத்தமாக கடமலை -மயிலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளில் மேகமலை விவகாரம் தொடர்பாக வனத்துறைக்கு எதிராக மலை கிராம மக்கள் தீர்மானம் முன்மொழிந்துள்ளனர்.