சென்னை - ராஜஸ்தான் மிதிவண்டி யாத்திரை: ஆற்காட்டில் பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு!


ஆற்காடு: 

பாபா ராம்தேவ் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, சென்னையில் இருந்து ராஜஸ்தான் வரை மிதிவண்டியில் யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான யாத்திரை நேற்று சென்னை சௌகார்பேட்டை மிண்ட் பகுதியில் அமைந்துள்ள பாபா ராம்தேவ் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதில் சுமார் 23 பக்தர்கள் பங்கேற்று காலை 10 மணி அளவில் மிதிவண்டியில் புறப்பட்டனர்.


யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று, பக்தர்கள் ஆற்காடு சுங்கச்சாவடியை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு ஆற்காடு மற்றும் வாலாஜா பகுதியைச் சேர்ந்த மார்வாடி சமூகத்தினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி உபசரித்து வழி அனுப்பி வைத்தனர்.


சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த மிதிவண்டி யாத்திரை ராஜஸ்தானை சென்றடைய சுமார் 30 நாட்கள் ஆகும் என்று பக்தர்கள் தெரிவித்தனர். மேலும், பக்தர்களின் இந்த ஆன்மீகப் பயணத்திற்காக பெங்களூரைச் சேர்ந்த நித்திஷ் ஜெயின் என்பவர் மிதிவண்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post