வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஞ்சுப்பேட்டை சீனிவாசன் பெருமாள் கோவில் தெருவில், வித்யா சோமு என்பவருக்குச் சொந்தமான காட்டன் வேஸ்ட் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மதியம் 3 மணி அளவில் தொழிலாளர்கள் உணவு உண்பதற்காகச் சென்றிருந்த நேரத்தில் திடீரெனச் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, மின் ஒயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பஞ்சு நூலில் தீப்பற்றியுள்ளது.
இத்தீ கம்பெனி முழுவதும் மளமளவெனப் பரவியதில், அங்கிருந்த சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான பஞ்சு நூல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உதவி மாவட்ட அலுவலர் தலைமையில் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இத்தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.