விளைநிலப் பாதைகள் ஆக்கிரமிப்பு: இராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குக்கயிற்றுடன் விவசாயிகள் நூதன போராட்டம்


ராணிப்பேட்டை, ஜூலை 31:

வாலாஜா வட்டம், கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளைநிலங்களுக்குச் செல்லும் பொதுவழிப் பாதையை ஆக்கிரமித்துள்ள தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முடங்கிக்கிடக்கும் பாதைப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நூதன முறையில் தூக்குக்கயிறு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னிகாபுரம் கிளைத் தலைவர் கே. முனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர். மோகன்ராஜ், சிபிஎம் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆ. கலைவாணன், துணைச் செயலாளர்கள் ம. ஜெயகாந்தன், செந்தில், வி.தொ.ச மாவட்டத் தலைவர் டி. சந்திரன், துணைச் செயலாளர்கள் ஜி. மதியழகன், கே. ஜெய்சங்கர், சீனி. ஜெகநாதன், எம். ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மாநிலச் செயலாளர் இரா. சரவணன் நிறைவுரையாற்றினார்.

கன்னிகாபுரம் கிராம விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் சென்று வரக் கூடிய பொதுவழிப் பாதையை, தனிநபர் ஒருவர் தனக்குப் பட்டா இருப்பதாகக் கூறி திடீரென வழிமறித்துத் தடை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து வாலாஜா வட்டாட்சியர், ஜமாபந்தி, இராணிப்பேட்டை கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, வாலாஜா வட்டாட்சியர் ஒருதலைப்பட்சமாகவும் அலட்சியமாகவும் செயல்படுவதாகவும், முன்பு பொதுவழிப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டு விற்கப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொள்ளாமல், UDR பதிவேட்டில் தவறுதலாக தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் கன்னிகாபுரம் பிரச்சினை மட்டுமன்றி, மாவட்டம் முழுவதும் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு பாதை ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் குறித்தும் குரல் எழுப்பப்பட்டது.

இப்பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமெனக் கோரி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வருவாய் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை மனுவை அளித்துச் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த நிர்வாகி நிலவுகுப்புசாமி, கிளைச் செயலாளர் ஆ. சிவாஜி, கிளைப் பொருளாளர் ஜி. முனிசாமி, சி. பிச்சாண்டி, எம். சுரேஷ், கே. சிவலிங்கம், எஸ். லட்சுமி, எஸ். வேண்டா, எம். சம்பத் உட்பட ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post