மேல்விஷாரத்தில் 2 மாதங்களாக மின்தடை: உதவி மின் பொறியாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு – போராட்ட எச்சரிக்கை


ஆற்காடு, ஜூலை 14:

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல்விஷாரம் நகராட்சி 19-வது வார்டு, ஹாஜி பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பழுதால் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் (J.E.) சாதிக் பாஷா அவர்களிடம் பலமுறை நேரிலும், மனு மூலமும் முறையிட்டதாக கூறுகின்றனர். இருப்பினும், பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி அமைக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், புதிய மின்மாற்றி அமைக்கக் கோரியபோது, "டிரான்ஸ்பார்மரை மாற்றித் தர முடியாது; உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள். நான் உங்கள் காலில் விழ வேண்டுமா? நான் என்ன உங்களுக்கு குலாமா?" என்று தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், இதனால் பொதுமக்களின் மனம் புண்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பேசியபோது அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லாதது போல பலிட்டியடித்து பேசினார்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த தகவலை அறிந்த உதவி மின் பொறியாளர் சாதிக் பாஷா, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிக மின்மாற்றி உடனடியாக வழங்கப்படும், புதிய மின்மாற்றி விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திட்டமிடப்பட்ட போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக கைவிட்டனர்.

இருப்பினும், விரைவில் புதிய மின்மாற்றி அமைக்கப்படாவிட்டால், சாலை மறியல் மற்றும் மின் வாரிய அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post