அதிமுகவை விட்டு விலக மாட்டேன்: வதந்திகளுக்கு ஆற்காடு எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார் விளக்கம்


ராணிப்பேட்டை:
அதிமுக தலைமையகக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக தலைமையகம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமையகத்தில் நடைபெற்ற ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஏழுமலை அழைப்பு விடுத்திருந்தார். 

இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொள்ளாததால், அவர் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டதாக வதந்திகள் பரவின.
இவற்றுக்கு மறுப்பு தெரிவித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.எம்.சுகுமார் விடுத்துள்ள விளக்க அறிக்கை:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கியக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆற்காடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் நேரில் முன்வைத்து, தொகுதி வளர்ச்சிக்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு இருந்தது
.
 தேர்தலில் ஆற்காடு தொகுதி மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றவே இக்கூட்டத்தில் பங்கேற்றேன். இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. தொகுதி வளர்ச்சி மட்டுமே எனது நோக்கம்." 
மேலும், கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்த அவர், "நான் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றுக் கட்சிக்குச் செல்ல மாட்டேன்.

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலிலும், ஆற்காடு தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் உழைப்பாலும் நான் வெற்றி பெற்றுள்ளேன். எனவே, அதிமுகவை விட்டு விலகும் எண்ணம் எப்போதும் இல்லை. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வெளிநாட்டில் நடைபெறும் தமிழ் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்றது தொகுதி நலனுக்காகவே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை" என்று தெளிவுபடுத்தினார்.
Previous Post Next Post